தமிழ் செய்திகள்

Tuesday, April 6, 2010

சீனாவில் பிடிபட்ட விசித்திர விலங்கு

கீழை நாடுகளில் குறிப்பாக,​​ இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மனிதர்களின் கண்களுக்கே தெரியாமல் நடமாடுவதாகக் கருதப்படும் யெதி என்ற பிராணியைக் கைப்பற்றிவிட்டதாக சீனா தெரிவிக்கிறது.​ அது யெதிதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

​இமயமலையில் யெதி என்கிற பனி மனிதன் உலவுவதாகவும்,​​ மிகப்பெரிய கால் தடங்களைக் கொண்டு அது யெதிதான் என்று தாங்கள் ஊகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு.​ அத்துடன் அந்த யெதியைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளும் உலவுவதால் ஆராய்ச்சியாளர்கள் யெதியைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.

இமயமலையில் மலையேறும் குழுக்களைச் சேர்ந்த சில வீரர்களும் விறகு வெட்டவோ,​​ தண்ணீர் எடுத்துவரவோ சென்ற கிராமவாசிகளும் யெதியைப் பார்த்திருக்கிறார்கள்.​ ஆனால் யெதி நடந்து செல்லும் வேகத்துக்குத் தங்களால் ஈடு கொடுக்க முடியாததால் பின் தொடர முடிந்ததில்லை என்றே தெரிவித்துள்ளனர்.​ யெதியின் காலடித்தடம் மிகப்பெரியது.​ எனவே அதன் உருவமும் மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

இந்த நிலையில் மத்திய சீனாவில் சிசுவான் மாகாணத்தில் வினோதப் பிராணியை வேட்டைக்காரர்கள் கண்ணிவைத்து பிடித்திருக்கின்றனர்.​ ஆனால் அது யெதிதான் என்று உறுதியாக்கப்படவில்லை.

கரடியைபோன்ற உருவம் ஆனால் கரடியைப் போல ரோமங்கள் இல்லை,​​ கங்காரு போல வால் -​ ஆனால் கங்காருவைப் போல துள்ளிக் குதிக்கவில்லை,கரடியைப் போல கட்டைக் குரல் இல்லை,​​ பூனையைப் போன்ற மென்மையான குரல் ஆகியவற்றுடன் இருக்கிறது இந்த வினோதப் பிராணி.​ பிடிபட்டது முதலே விடாமல் கத்திக் கொண்டிருக்கிறது.​ அது தன் இனத்தாரை துணைக்கு அழைப்பதைப் போலத் தெரிகிறது.​ ஆனால் அதன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு பிராணி எதுவும் அது வைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு வரவேயில்லை.​ மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இது பிடிபட்டது.​ கரடியைப் போல உருவம் என்பதால் தூரத்திலிருந்து பார்க்க மனிதனைப் போன்றே தெரிந்தது.​ ஆனால் அது மூர்க்கத்தனமாக எதையும் செய்யவில்லை.

இப்போது அந்தப் பிராணியை பெய்ஜிங்கில் உயர் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.​ விரைவில் மேல் விவரங்கள் தெரியக்கூடும்.

No comments:

Post a Comment